இந்தியா முழுக்க லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தால் வேளான் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தற்சார்பு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் கி.வே. பொன்னையன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் நம்மிடம் கூறும்போது,
தமிழகத்திலுள்ள 4.5 இலட்சம் லாரிகள் கடந்த ஒரு வாரகாலமாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. லாரிகள் வேலை நிறுத்தத்தால் விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் உற்பத்தி செய்த வேளாண் விளை பொருட்களை விற்பனைக்காக எங்கும் எடுத்துச் செல்லமுடியாமல் அப்பொருட்கள் முடங்கிப்போய் உள்ளது.
காய்கறி, பழங்கள் போன்ற அழுகும் பொருட்கள் பெருமளவு சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் அறுவடைக்குத் தயாராக உள்ள மரவள்ளிக் கிழங்கு போன்ற பல விளைபொருட்கள் அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. அனைத்து வேளாண் ஒழுங்குமுறைக் கூடத்திலிருந்தும் பொருட்கள் வெளியே கொண்டு செல்லமுடியாத காரணத்தால் வணிகம் பெருமளவில் முடங்கி விட்டது.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர். மத்திய அரசு உடனடியாக லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்களை ஏற்று போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரவேண்டும். தமிழக அரசு தற்போது நடைபெறும் போராட்டத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முழு உதவிகளையும் செய்யவேண்டும்." என்றார்.