தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது சின்னவநாயக்கன்பட்டி. நாயக்கர், நாடார், தலித் என பல்வேறு சமூகத்தினர் வசிக்கும் இந்த கிராமத்தில், அண்மையில் 2 பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால், பதற்றம் நிலவி வருகிறது.
கடந்த 6-ந்தேதி தீபாவளியன்று தலித் சமூகத்தினர் வசிக்கும் தெருப்பக்கம் நாயக்கர் சமூகத்தை சேர்ந்த தயாநிதி என்பவர் சென்றிருக்கிறார். அப்போது, நாய் குறைத்ததால் நாய் மீது கல் எடுத்து வீசி இருக்கிறார். இதை அங்கிருந்தவர்கள் தட்டிக்கேட்டிருக்கின்றனர். இதையடுத்து, தனது உறவினர்கள் வேல்சாமி, முத்துவேல், பரமசிவம் உள்ளிட்ட உறவினர்களை ஆயுதங்களுடன் அழைத்து வந்த தயாநிதி, தலித் மக்களுடன் தகராறு செய்திருக்கிறார். அப்போது, தலித் சமூகத்தை சேர்ந்த பெரிய மாரிமுத்து, சண்முகராஜ், கருப்பசாமி ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சண்முகராஜ் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், மற்ற இருவர் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தயாநிதி உள்ளிட்ட 14 பேர் மீது, சங்கரலிங்கபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நாம் விசாரித்தபோது, தலித் மக்கள் வசிக்கும் பகுதி அருகே கண்மாய் நிலத்தில் பள்ளிக்கூடம் கட்ட நாயக்கர் சமூகத்தினர் முயற்சித்ததாகவும், அதற்கு தலித் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததே, இப்போதைய மோதலுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இருதரப்பினரையும் அழைத்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய அரசு, மவுனம் காப்பது நல்லதல்ல.!!