
திருச்சி சிறுகனூர் பகுதியில், கூலிப்படையை ஏவி கணவனைக் கொன்ற வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி சிறுகனூர் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் தன்னுடைய பேத்தியின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காக சி.ஆர்.பாளையம் சென்று வீடு திரும்பிகொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரை வழிமறித்து கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், அவருடைய மனைவி கூலிப்படையை ஏவி கொலை செய்தது உறுதியானது. முத்துவின் மனைவியும், கொலை செய்த மர்ம நபர்கள் 4 பேரும் தலைமறைவாக இருந்தனர்.
அவர்களைத் தீவிரமாக தேடிவந்த காவல்துறையினர் இன்று (18.02.2021) அந்த நான்கு நபர்களையும் கைது செய்தனர். முத்து மனைவியின் காதலன் எம்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த சிலம்புகுட்டி (எ) சிலம்பரசன் (22) மற்றும் கூலிப்படையாக செயல்பட்ட பல்லபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் (35), கார்த்திக்ராஜா (19), லால்குடி அருகே உள்ள சிறுமருதூரைச் சேர்ந்த மணிகண்டன் (28) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.