ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற எல்லாமே ‘‘ஒரே ஒரே’’ என்று கூறும் மத்திய பி.ஜே.பி. அரசு - இப்பொழுது ஒரே ரேசன் கார்டு என்று கூறுவது கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஒற்றை ஆட்சி முறைக்கே வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடு
ஒரே நாடு (இந்துராஷ்டிரம்), ஒரே மதம் (ஹிந்து மதம்), ஒரே கலாச்சாரம் (சமஸ்கிருத கலாச்சாரம்), ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே தேர்தல் (இறுதியில் ஜனநாயகத்திற்கு விடை கொடுக்கும் ஒரே அதிபர் என்பதை நோக்கியே) என்கிற திட்டமிட்ட வரிசையில், ஒரே ரேஷன் கார்டு என்பதை மத்திய அரசு அறிவித்திருப்பது,
கூட்டாட்சித் தத்துவத்தை (Federal) ஒழித்து, மாநில உரிமைகளைப் பறித்து, ஒற்றை (மத்திய) ஆட்சி முறைக்கே (Unitary system of Government) என்பதற்கே வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடாகும்.
![k](http://image.nakkheeran.in/cdn/farfuture/aLupyb6Hmlmwl0nAWDIb-Bs3DgJMGsQHmWM-SnmmKgI/1561801820/sites/default/files/inline-images/K.%20Veeramani_2.jpg)
தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளியவர்களுக்குப் பயன்பட சலுகை விலையில் (கோதுமை 2 ரூபாய், அரிசி கிலோ மூன்று ரூபாய்) என்பது போன்று தருவதை மற்ற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வருகின்றவர்களும் (Migrant Population) பயன்பெறும் வகையில் இந்த ஏற்பாடு என்று உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் வெளிப்படையாகக் கூறியுள்ளார்!
‘‘The biggest beneficiary of this he (Paswan) said, would be migrant labourers who move to other states to seek better job opportunities.’’
அந்தந்த மாநிலத்தின் உணவு நிலவரம், உணவு விநியோக முறை எல்லாம் ஒரே சீரான முறையில் இருக்கிறதா என்பது முதல் கேள்வி.
‘ஆமாம் சாமி’ போட்டு தமிழக அரசு
தலையாட்டி விடக்கூடாது
இரண்டாவது மாநிலங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு பிரச்சினைகளிலும், திருட்டு, செயின் பறிப்பு, இரயில் கொள்ளை முதலிய பலவற்றிலும் ஈடுபடும் அதிகமான வெளிமாநிலத்துக் கும்பல்கள் இங்கே வீடு பிடித்து, ‘டிப் டாப்’ ஆசாமிகளாக வாழ்வதோடு, விமானத்தில் வந்து ஆடம்பர ஒப்பனையோடு கொள்ளைகள் நடத்திய செய்திகளை எவரே மறுக்க முடியும்?
தமிழ்நாடு அரசு இப்பிரச்சினை, அதன் நிலைப்பாடு (Stand) என்னவென்பதை தெளிவுபடுத்தி, இத்திட்டத்தை ஏற்க மறுக்கவேண்டும் துணிவுடன். ‘ஆமாம் சாமி’ போட்டு தலையாட்டி விடக்கூடாது.
மாநிலத்தின் உரிமைப் பிரச்சினை:
தமிழ் மாநிலத்தின் உணவு உரிமை என்பதைவிட, நம் மாநிலத்தின் உரிமைப் பிரச்சினை இது என்பதால், தெளிவுடனும், துணிவுடனும் நடந்துகொள்ளவேண்டும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய முன்வரவேண்டும்.