குன்றத்தூர் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரிய வழக்கிற்கு தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் குன்றத்தூர் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்கக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முருகனின் மனுவில்‘உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு மறுவரையறை செய்யும் பணியை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதில், குன்றத்தூரில் பட்டியலின வார்டுகளாக இருந்த 5,6,7 ஆகியவை இணைக்கப்பட்டு வார்டு 18 என ஒரே வார்டாக உருவாக்கப்பட்டது.
இதன்மூலம், குன்றத்தூர் பேரூராட்சியிலிருந்து ஒரே ஒரு பட்டியலின வார்டு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், மனு குறித்து தமிழக அரசும் மாநில தேர்தல் ஆணையமும் நவம்பர் 26-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.