சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குண்டாஸ் கைதி ஒருவர், இரண்டாவது மாடியில் இருந்த கழிப்பறையின் ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துவேல் (29). கூலித்தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சொத்துக்காக தாய், சித்தி ஆகியோரை கொலை செய்தார். இதையடுத்து நாகரசம்பட்டி போலீசார் முத்துவேலை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
சேலம், மத்திய சிறையில் அவர் 8வது தொகுதியில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 16ஆம் தேதி, காலை 6 மணியளவில் தன்னுடைய அறையில் இருந்து சிறை வளாகத்திற்கு வந்தார். அப்போது வேகமாக மாடிக்கு ஏறிய அவர், திடீரென்று கீழே குதித்தார். இதில், அவருடைய முதுகெலும்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்ட சிறைத்துறையினர், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில், மது பழக்கத்திற்கு அடிமையானதால் சொத்திற்காக தாயையும் சித்தியையும் கொலை செய்த வழக்கில் கைதாகியிருப்பதும், அவரைப் பார்க்க உறவினர்கள் வராமல் இருந்ததும், கடைசி வரை சிறையில்தான் ஆயுளைக் கழிக்க வேண்டும் என சக கைதிகள் கிண்டல் செய்து வந்ததாலும் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
சேலம் அரசு மருத்துவமனையின் 2வது மாடியில் உள்ள அறையில் முத்துவேலுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், புதன்கிழமை (ஜன. 27) அதிகாலை 4.50 மணியளவில், கழிவறைக்குச் செல்ல வேண்டும் என கூறியுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக்காவலர் அவரை அழைத்துச் சென்றார். அப்போது கழிப்பறை ஜன்னல் வழியாக, சுமார் 80 அடி உயரத்தில் இருந்து முத்துவேல் கீழே குதித்தார். உள்ளே சென்றவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த காவலர், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, முத்துவேல் தரையில் சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சேலம் மத்திய சிறை எஸ்.பி. தமிழ்ச்செல்வனுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. கைதி தற்கொலை செய்ததால், மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடந்து வருகிறது.
அரசு மருத்துவமனையில் கைதி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.