தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று (மே 6, 2018) நடந்தது. முன்னதாக, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’எனக்கு தொடர்ந்து மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நக்கீரன் புலனாய்வு இதழும் தெளிவாக எழுதி இருக்கிறது. இதுபற்றி புகார் கொடுத்தாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இரவு சேலம் ஹோட்டலில் தங்கியிருக்கும்போது மர்ம நபர்கள் சிலர் என் அறை கதவை தட்டினர். போனிலும் மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டால், பேய் ஏதும் கதவுகளைத் தட்டியிருக்கும் என்கின்றனர்.
தமிழகத்தில் உளவுத்துறை முற்றிலும் செயல் இழந்து கிடக்கிறது. அதனால்தான் கள்ள லாட்டரி சரளமாக விற்பனையாகிறது. தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு விரைவில் அனுமதி கொடுக்கும் திட்டம் உள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்திருக்கிறது. லாட்டரி அதிபர்கள் எடப்பாடி அரசுடன் பல கோடி ரூபாய் இதற்காக பேரம் பேசியுள்ளனர்.
சேலம் விமான நிலையம் விரிவாக்கத்திற்காக 570 ஏக்கர் விவசாய நிலங்களை எடப்பாடி பழனிசாமி அரசு கையகப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். காமலாபுரம், சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி, பொட்டியபுரம் ஆகிய பகுதி மக்கள் எடப்பாடி கட்சிக்கு ஓட்டு போடவில்லை என்பதை மனதில் வைத்துக்கொண்டு இரண்டு சமூகத்தினரை ஒடுக்கும் நோக்கில் இவ்வாறு செயல்படுகிறார்.
அவர் ஒரு சட்ட விரோத முதலமைச்சர். மைனாரிட்டி முதலமைச்சர். முதல்வர் பதவி எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். அதன்பிறகு நீ வாழ்வதற்கு சேலத்திற்குதான் வர வேண்டும். எடப்பாடி... அப்போது பார்த்துக் கொள்கிறோம்’’என்று கூறினார்.
கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் கண்ணன், ராஜலிங்கம், யுவராஜ், செல்வம், ஜெயமோகன், தாரை செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- எஸ்.இளையராஜா