பீகார் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 வயதுடைய சிறுமியை சென்னை போலீசார் உதவியுடன் பாட்னா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சஜாதா காதுன் என்ற 15 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் திடீரென காணாமல் போனார். பள்ளிக்குச் சென்ற சிறுமி திரும்பி வராததால் அச்சமடைந்த அச்சிறுமியின் பெற்றோர்கள் பாட்னா போலீசில் புகாரளிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் காணாமல் போன அந்தச் சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த மனிஷா குமாரி என்ற 18 வயது இளம்பெண் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
அதனையடுத்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மனிஷா குமாரி சிக்கினார். அந்த ரயிலில் பயணசீட்டு இன்றி பயணித்த பொழுது பயணச்சீட்டு பரிசோதகரிடம் சிக்கினார் மனிஷா. பரிசோதகர் பயணசீட்டு எடுக்காததால் போலீசில் பிடித்து தருவதாக கூற அதற்கு பயந்த மனிஷா அவரிடமிருந்து தப்பிக்க ரயில் மெதுவாக சென்ற தருணத்தில் அவரின் கவனத்தை திசைதிருப்பி ரயிலில் இருந்து எகிறி குதித்துள்ளார். இதனால் மனிஷா குமாரிக்கு சிறிது காயம் ஏற்பட்டதால் அவர் மீட்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். காயமடைந்த மனிஷா குமாரியை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்தப் பெண் வெறும் 400 ரூபாய்க்கு அந்த சிறுமியை விற்பனை செய்ததை போலீசாரிடம் தெரிவித்தார். இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை கேட்டு அதிர்ந்த போலீசார் சிறுமி யாரிடம் விற்கப்பட்டது என தீவிரமாக அவரிடம் விசாரித்தனர். சிறுமியை ஏமாற்றி செகந்திராபாத் அழைத்து வந்த மனிஷாகுமாரி அங்கு வைத்து பிரகாஷ் யாதவ் என்பவனிடம் 400 ரூபாய்க்கு விற்றுவிட்டு பின்னர் பாட்னா திரும்புவதற்காக ரயிலில் பாட்னா திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டிக்கொண்டு ரயிலில் இருந்து கீழே குதித்து இறுதியில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து செகந்திராபாத் சென்ற பாட்னா போலீசார் அங்கு விசாரணை நடத்தியதில் பிரகாஷ் யாதவ் சிறுமியை சென்னை அழைத்து சென்றது தெரியவந்தது. சென்னை போலீசாரின் உதவியை நாடியது பாட்னா போலீஸ்.
மனிஷா குமாரியிடமிருந்து சிறுமியை பெற்ற பிரகாஷ் யாதவின் செல்போன் எண்ணை பெற்று அதனை வைத்து விசாரணை மேற்கொண்ட குற்றவியல் தடுப்பு பிரிவு போலீசார் பிரகாஷ் யாதவ் பெரம்பூரில் இருப்பதை கண்டறித்தனர். இதனையடுத்து தமிழக போலீசாரின் உதவியுடன் பாட்னா போலீசார் பெரம்பூரில் வைத்து பிரகாஷ் யாதவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிரகாஷ் யாதவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடத்திவரப்பட்ட சிறுமியை அன்சாரி என்பவரிடம் ஒப்படைத்ததாக அவன் தெரிவித்துள்ளான். ஆனால் அன்சாரி அதன் பின்னர் அந்த சிறுமியை என்ன செய்தான்,எங்குள்ளான் என்பது குறித்தும் தெரியாது என அவன் கூறியுள்ளான். இந்த நிலையில் கடத்தப்பட்ட சிறுமியின் பெற்றோரும், பாட்னா போலீசாரின் ஒரு குழுவினரும் சென்னையில் முகாமிட்டு சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல் போலீசாரின் மற்றொரு குழுவினர் கைது செய்யப்பட்ட பிரகாஷ் யாதவை பாட்னா அழைத்துச் சென்று அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.