சேலத்தில் பிரபல கள்ள லாட்டரிச்சீட்டு அதிபர் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது.
சேலம் சீலநாயக்கன்பட்டி காஞ்சி நகரை சேர்ந்தவர் சதீஸ் என்கிற சதீஸ்குமார் (40). தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்கவும், அச்சடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் சதீஸ், கேரள மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வந்தார்.
கடந்த 2016ம் ஆண்டு சதீஸை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அவர் சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்த பிறகும், தொடர்ந்து கள்ள லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி குகை சிவனார் தெருவைச் சேர்ந்த ஜீவா என்பவரிடம் சதீஸ்குமார் லாட்டரி சீட்டு நம்பர் எழுதப்பட்ட துண்டு காகிதத்தைக் கொடுத்து விற்பனை செய்துள்ளார். அப்போது அங்கு வந்த வேறு சில நபர்கள், அதிக பரிசுத்தொகை விழும் என ஏமாற்றி ஏற்கனவே இதுபோல் பலமுறை எங்களிடம் லாட்டரி சீட்டு விற்றிருக்கிறாய். ஆனால் ஒருமுறைகூட பரிசு விழவில்லை. அதனால் அந்தப் பணத்தை எல்லாம் திரும்பத் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு ஜீவாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி கேட்க, சதீஸ்குமார் கத்தியைக் காட்டி மிரட்டியதோடு, ஆபாச வார்த்தைகளாலும் திட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் சதீஸ்குமாரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த கத்தி மற்றும் லாட்டரி எண்கள் எழுதப்பட்ட 160 துண்டு காகிதங்களையும் கைப்பற்றினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து குற்றத்தில் ஈடுபட்டு வந்த சதீஸ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர், சேலம் மாநகர காவல்துறை துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் பரிந்துரை செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில் சதீஸ்குமாரை இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.