கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து கடந்த 17 ஆம் தேதி சென்னை எழும்பூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அப்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான இரயில்வே பாலம் முழுவதும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாகச் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 17 ஆம் தேதி இரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் ரயிலில் இருந்த சுமார் 800 பயணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதியடைந்தனர். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து வெள்ளத்தால் 3 நாட்கள் ரயிலில் சிக்கியிருந்த ரயில் பயணிகள் கடந்த 19 ஆம் தேதி மீட்கப்பட்டனர். 6 பேருந்துகள் மூலம் 400க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பாதிக்கப்பட்ட ரயில் பயணிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து மற்றொரு ரயில் மூலம் பயணிகள் மதுரை சென்றனர். பின்னர் அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் செல்வக்குமாருக்கு ரயில்வே துறை சார்பில் 5 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் வெள்ளத்தால் தாதன் குளம் அருகே ரயில் தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியதை பார்த்த ரயில்வே ஊழியர் செல்வக்குமார், உரிய நேரத்தில் தகவல் கொடுத்ததால் ஸ்ரீவைகுண்டத்திலேயே ரயில் நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.