வேலூர் மாவட்டம் குடியாத்தம் ( தனி ) தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் காத்தவராயன். திமுகவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். திருமணம் செய்துக்கொள்ளவில்லை. தனது சகோதரர் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார்.
இந்நிலையில் அவருக்கு இதயநோய் இருந்துள்ளது, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்தவருக்கு வேறு சில காரணங்களால் அது குணமாகாமல் கடந்த மாதம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. கடந்த வாரம் மருத்துவமனைக்கு நேரில் சென்று எம்.எல்.ஏ காத்தவராயன் உடல் நலனை விசாரித்துவிட்டு வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை சீரடையவில்லை. அவரது உடல் மிகமோசமான கட்டத்தில் இருப்பதாக மருத்துவ குழு, எம்.எல்.ஏவின் உறவினரை அழைத்து தகவல் கூறியுள்ளார்கள். இதனை கேட்டு அதிர்ச்சியாகியது அவரது சகோதரர் குடும்பம்.
இந்த தகவல் உடனடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்றது. அவர் மருத்துவமனைக்கு சென்று மீண்டும் பார்த்துவிட்டு, மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டுவிட்டு வந்துள்ளார். இந்த தகவல் வேலூர் மாவட்ட கட்சியினருக்கு தெரியவந்து திமுகவினர் அதிர்ச்சியாகியுள்ளனர்.
பிப்ரவரி 27ந்தேதி திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போது எம்.எல்.ஏ வாக உள்ள கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்ததுள்ள நிலையில் மற்றொரு திமுக எம்.எல்.ஏ கவலைக்கிடமாக இருப்பது திமுகவினரை கவலையடைய செய்துள்ளது.