Skip to main content

தந்தையின் தோழியை கொன்ற சிறுவர்கள்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

Krishnagiri incident

 

ஊத்தங்கரை அருகே, தந்தையுடனான தவறான தொடர்பை கைவிட மறுத்ததால் அவருடைய தோழியை கழுத்து அறுத்துக் கொன்ற சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் குமார் (48). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி திலகம் (40). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து திலகம், கணவரை பிரிந்து அவருடைய தாயார் வீட்டில் வந்தார். மகன்கள் இருவரும் தந்தையுடன் வசிக்கின்றனர். 

குமார், வேலைக்காக தேனி மாவட்டத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கு ரத்தினம் (46) என்ற பெண்ணுடன் 'நெருங்கி' பழகி வந்துள்ளார். கடந்த சில ஆண்டாகவே அவர்கள் பலமுறை தனிமையில் சந்தித்து 'நெருக்கமான' தொடர்பில் இருந்துள்ளனர்.

 

 


இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுக்கு முன்பே திடீரென்று குமார் தேனியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அடுத்த சில நாள்களில் அவரை தேடி ரத்தினமும் தேனியில் இருந்து நடுப்பட்டிக்கு வந்து சேர்ந்தார். மனைவி திலகமும் அவருடைய பெற்றோர் வீட்டில் இருப்பதால், தன்னை தேடி வந்த ரத்தினத்துடன் ஒரே வீட்டில் சேர்த்துக்கொண்டு குமார் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், ரத்தினம் திடீரென்று வியாழக்கிழமை (ஏப். 30) இரவு, வீட்டில் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டுக் கிடந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 


முதல்கட்ட விசாரணையில் ரத்தினத்தை, குமாரின் இரண்டு மகன்கள் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. தாயை பிரிந்து இருக்கும் தந்தையை கைக்குள் போட்டுக்கொண்டதாக கடந்த ஒரு மாதமாகவே ரத்தினத்துடன் குமாரின் மகன்கள் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். தனது தந்தையுடனான தொடர்பை கைவிட வேண்டும் என்றும் மிரட்டி வந்துள்ளனர். 

இப்போது ஊரடங்கு உத்தரவு உள்ளதால் சொந்த ஊருக்குப் போக முடியாது என்று ரத்தினம் கூறி இருக்கிறார். இந்த நிலையில்தான் சம்பவத்தன்றும் குமாரின் மகன்களுக்கும் ரத்தினத்திற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள் ரத்தினத்தை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவனின் வயது 18 என்பதும், மற்றொரு மகனின் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 
 

சார்ந்த செய்திகள்