18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாக தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று 01-06-24 அன்று 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும், உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். தொடர்ந்து, 2004, 2009, 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வந்த ராகுல் காந்தி, கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.
இருப்பினும், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினரானார். இந்த மக்களவைத் தேர்தலில், ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று காலை முதல் வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வருகின்றன. ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியிலும், ரேபரேலி தொகுதியிலும் வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வரும் முதல் சுற்று நிலவரப்படி முன்னிலை வகித்து வருகிறார்.
அதே போல், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் உத்தரப் பிரதேசம் மாநிலம், வாரணாசி தொகுதி பிரதமர் நரேந்திர மோடியின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தேர்தலில், மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில், அஜய் ராய் போட்டியிடுகிறார். பா.ஜ.கவைச் சேர்ந்த அஜய் ராய் கடந்த 2007ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2014, 2019, 2024 என தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடியை எதிர்த்து அஜய் ராய் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வரும் முதல் சுற்று நிலவரப்படி அவர் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு வகித்து வருகிறார். தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்து வரும் நிலையில், முக்கிய வேட்பாளர்களாக இருக்கும் ராகுல் காந்தி முன்னிலையிலும், மோடியிலும் பின்னடைவும் அடைந்து வருவது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது