இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று (04-06-24) வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பா.ஜ.க ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு கடிதம் வழங்கினர். இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA - என்.டி.ஏ.) தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நாளை மறுநாள் (07.06.2024) நடைபெற உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு 75க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லிதுவேனியா அதிபர் கிடானாஸ் நௌசேடா, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பிரசந்தா மற்றும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு. இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா', இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சிலர் பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், சுமார் 650 மில்லியன் வாக்காளர்களுக்கும் வாழ்த்துகள். வரம்பற்ற சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் பகிரப்பட்ட எதிர்காலத்தை நாம் திறக்கும்போதுதான் நமது நாடுகளுக்கிடையேயான நட்பு வளர்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பிரதமர் நன்றி தெரிவிக்கும் வகையில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது நண்பர் ஜோ பைடனிடம் இருந்து அழைப்பைப் பெறுவது நல்ல செயல் ஆகும். அவரது அன்பான வாழ்த்துச் சொற்களையும் இந்திய ஜனநாயகத்திற்கான அவரது பாராட்டுக்களையும் ஆழமாக மதிக்கிறேன். இந்தியா - அமெரிக்க விரிவான உலகளாவிய கூட்டாண்மை வரும் ஆண்டுகளில் பல புதிய அடையாளங்களைக் காண தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மனிதகுலத்தின் நலனுக்காக உலகளாவிய நன்மைக்கான ஒரு சக்தியாக எங்கள் கூட்டாண்மை தொடர்ந்து இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.