நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் 'மனமாட்சியம் மறந்து ஒன்றாக வேண்டும்' என எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு முன்னதாகவே சசிகலாவும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என அறிக்கை வாயிலாக வலியுறுத்தி இருந்தார்.
ஓபிஎஸ் வெளியிட்ட இது தொடர்பான அறிக்கையில் 'ஒற்றைக் குச்சியை உடைப்பது சுலபம்; கத்தை குச்சியை முறிப்பது கடினம். இனியும் தாமதம் சொல்லி தோல்விக்குத் தொண்டர்களைப் பழக்குவது பாவ காரியம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றாக வேண்டும். கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்துக்கும் தயாராகுவோம்' என ஓபிஎஸ் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது சசிகலா, ஓபிஎஸ் - இன் அழைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ''சசிகலா அறிக்கையை நானும் பார்த்தேன். அவர் ஜெயலலிதா இடத்தில் பணி செய்வதற்காக சென்றவர். தொடர்ந்து பணி செய்து தன்னை அந்த இல்லத்தில் நிலை நிறுத்திக் கொண்டு 36 ஆண்டுகள் ஜெயலலிதாவின் பின்னால் நின்று அதிகாரத்தை சுவைத்தவர். அப்படி சுவைத்தவர் இன்று இந்த இயக்கத்தைக் காப்பாற்றுவேன் வாருங்கள் எனக் கூறுகிறார். அனேகமாக அந்த அறிக்கை வெளியே வந்து 24 மணி நேரம் ஆகி இருக்கும் என நான் கருதுகிறேன். அந்த அறிக்கையில் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். அனைவரும் வாருங்கள் நான் ஜெயலலிதாவை போல எந்தப் பிரதிபலனும் இல்லாமல் உங்களுக்காக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். அவர் குடி இருக்கும் வீட்டிற்கு ஜெயலலிதாவின் பெயரை வைத்திருக்கிறார். அந்த ஜெயலலிதா இல்லத்திற்கு வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
24 மணி நேரத்தில் எத்தனை பேர் சென்றார்கள் என்பதை ஊடக நண்பர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழப்பத்தைத் தாண்டி தெளிவான நிலையில் எடப்பாடி பழனிசாமி அனைத்து தொண்டர்களையும் அரவணைத்து தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு ஒரே ஒரு காரணம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எங்களோடு பாஜக இருந்தது; தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் இருந்தது; பாட்டாளி மக்கள் கட்சி இருந்தது; புதிய நீதி கட்சி இருந்தது; புதிய தமிழகம் இருந்தது; ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இருந்தது. இவ்வளவு கூட்டணியில் 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் வாங்கிய வாக்கு 18 விழுக்காடுகள். 2024 இப்பொழுது அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கிறது. இப்பொழுது நாங்கள் வாங்கிய வாக்கு 20.46 சதவீதம் பெற்றிருக்கிறோம். அதிமுக தலைவர்களை விமர்சித்த ஒருவரோடு கூட்டணி அமைத்த ஓபிஎஸ்க்கு அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் எனப் பேசத் தகுதி இல்லை. அறிவுரைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.