புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் அடுத்தடுத்த சாதனைகளால் தமிழ்நாடு முழுவதும் பேசப்படுகிறது. 2020 ம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு கொண்டு வந்த முதல் ஆண்டிலேயே 4 மாணவிகளை மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பிய பள்ளி தொடர்ந்து 4 ஆண்டுகளில் 14 எம்பிபிஎஸ், 3 பிடிஎஸ், 2 சித்தமருத்துவம் 19 மாணவிகளை பல்வேறு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளனர்.
அதேபோல இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த பரபரப்பான நேரத்தில் சத்தமே இல்லாமல் நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளால் வழக்கம் போல கீரமங்கலம் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
காரணம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு எழுதி இருந்த நிலையில் நேற்று மாலை தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் சுவேதா 586 மதிப்பெண்களும், புவனா 511 மதிப்பெண்களும், சதா 502 மதிப்பெண்களும் என 3 மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். அதேபோல அபிநயா 496, கீர்த்தனா 482, ரட்சணா 453, பாரதி 439, பபிதா 439, சமீரா பானு 428, அன்பரசி 425, அசிதா 415, செல்சியா 410, அறிவரசி 406 உட்பட 10 க்கும் மேற்பட்ட மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். மேலும், ஜெயலெட்சுமி 389 மதிப்பெண் பெற்றுள்ளார். கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தொடர்ந்து சாதித்து வருவதைப் பார்த்து பள்ளி தலைமை ஆசிரியை வள்ளிநாயகி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகளை பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழுவினர் என ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.
இதேபோல மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் விவேகீஸ்வரன் 483 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தொடர்ந்து கீரமங்கலம் பகுதி மாணவர்கள் வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளிலும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளிலும் அதிகமானோர் தேர்ச்சி பெறுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.