இந்தியாவில் இந்த ஆண்டு கோடை வெப்பத்துக்கு இதுவரை 76 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடமாநிலப்பகுதிகளில் ஆண்டுதோறும் வெப்ப மரணம் என்பது இயல்பாக நடைபெறும். தென்னிந்திய மாநிலங்களில் அது குறைவு. தென்னிந்திய மக்கள், வெப்பமயக்கம், வெப்பசோர்வு, ஹீட் ஸ்ட்ரோக் என்பதை புதிய வார்த்தைகளாக இந்தக் கோடைகாலத்தில் கேட்க துவங்கியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் வெப்பத்தால் மரணத்தை சிலர் சந்தித்துள்ளார்கள். அது அவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெப்பத்தினால் ஏற்படும் மரணங்களைப் பற்றி அடிக்கடி கேள்விபடுகிறோம், அதனால் வெப்பத்தால் நம் உடம்பிற்கு ஏற்படும் விளைவுகளை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் கவனமாக இருக்க முடியும். இந்த நிலையில் ஹீட் ஸ்ட்ரோக் குறித்து வேலூர் கிருஸ்த்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் மருத்துவர் ஐ.ரம்யாவிடம் கேட்டோம். அவர்கள் கூறியதைக் கேள்வி பதிலாக கீழே தொகுத்துள்ளோம்...
வெப்பத்தால் உடம்பிற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?
சுற்றுச்சூழலில் கூடுதலான வெப்பம் இருக்கும்போது வெப்பசோர்வு (heat exhaustion), வெப்பமயக்கம் (heat syncope), ஹீட்ஸ்ட்ரோக் (heat stroke) ஏற்படலாம். வெப்பசோர்வின் அறிகுறிகள் உடல்அலுப்பு, தலைச்சுற்று, தசைப்பிடிப்பு, குறைந்த ரத்த அழுத்தம், போன்றவை ஏற்படும் ஆனால் உடல்வெப்பம் கூடாது அது இயல்பாகத்தான் இருக்கும். வெப்பமயக்கம் வெயிலில் நிறைய நேரம் நிற்கும்போது ஏற்படும், வெயிலின் தாக்கத்தால் மயக்கம் ஏற்படும்.
ஹீட்ஸ்ட்ரோக் வெப்பதாக்கத்தினால் ஏற்படும் மிகதீவிரமான உடல்தொந்தரவு. உடலின் வெப்பநிலை 40C க்குதிடீர்னு கூடிவிடும், நாக்கு, கண்வறண்டு இருக்கும், மனநிலைமாறுபாடுகள் ஏற்படும், குழப்பம், பேச்சு உளறல் ஆக மாறும். இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு உடன் அழைத்துச் செல்லவேண்டும்.
வெப்பத்தினால் ஏற்படும் உடல் விளைவுகள் யாருக்கு அதிகமாக இருக்கும்?
முதியோர், நரம்பு நோய்களுக்கு மருந்து உட்கொள்பரகள், மனநோய்க்கு மருந்து உட்கொள்பர்கள், சிறுகுழந்தைகள், வெயிலில் வேலை செய்பவர்கள், காவல்துறையினர், போக்குவரத்துதுறையினர், ராணுவம், கட்டிட வேலைபார்ப்பவர்கள், தெருவில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும் விளையாட்டுவீரர்கள் (கிரிக்கெட் போன்ற நெடுநேர விளையாட்டுகள்) இவர்கள் அனைவருக்கும் ஹீட்ஸ்ட்ரோக் வரவாய்ப்புள்ளது.
வெப்ப மயக்கம் வந்தால் என்ன செய்யவேண்டும்?
உடனடியாக நிழலுக்கு கொண்டுச்சென்று, படுக்கவைக்கவேண்டும். அவர்களது கால்களை உங்களது தோளுக்கு மேல் உயர்த்த வேண்டும், நினைவு திரும்பியதும் தலைதூக்கி குளுர்ச்சியாக அருந்த குளிந்த தண்ணீர் அல்லது பழச்சாறு கொடுக்கலாம். விசிறி விடவேண்டும். உடல்நிலையில் முன்னேற்றம் இல்லையென்றால் நினைவு திரும்பவில்லை என்றாலும் மருத்துவமனை அழைத்துச்செல்லவேண்டும்.
வெப்பசோர்வு ஆகிவிட்டால் என்ன செய்யலாம்?
வெயிலில் இருந்து உடனடியாக நிழலுக்கு செல்லவேண்டும். குளிர்ந்த நீர் தெளித்துவிடவேண்டும் அல்லது துணியில் குளிர்ந்தநீர் எடுத்துத் துடைத்துவிடலாம். இறுக்கமான ஆடைகள் அணிந்திருந்தால் தளர்த்தி விடவேண்டும். குளிர்ந்த நீர் அல்லது மோர், பழச்சாறு எடுத்துக்கொள்ளலாம்.
ஹீட்ஸ்ட்ரோக் அறிகுறிகள் இருந்தால் என்ன செய்வது?
உடனடியாக மருத்துவமனை அழைத்துச்செல்லவேண்டும், இவர்களுக்கு தீவிர சீகிச்சை தேவைபடும்.
ஹீட்ஸ்ட்ரோக்னால் உடலுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படலாம்?
சிறுநீரகம், ஈரல், நுரையீரல், இருதயம் செயல்பாடு இழப்பு ஏற்படலாம், உயிருக்கு ஆபத்து கூட ஏற்படலாம், உடனடியாக தீவிரசிகிச்சை அளித்து உடல்வெப்பத்தை குறைத்தால் இந்தச் சிக்கல்களை தவிர்க்கலாம்
வெப்பதாக்குதலில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது?
தளர்வான ஆடைகள் அணியவேண்டும், பருத்தியினால் செய்த ஆடைகள் அணியவேண்டும். தலைக்குதொப்பி அணியவேண்டும், குடை உபயோகிக்க வேண்டும், குளிர்கண்ணாடி அணியவேண்டும், உடல்நிலைசரியில்லை என்றால் வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும், சிறுபிள்ளைகளை வெயிலில் வண்டியில் விட்டு செல்லாதீர்கள், வெயிலில் நெறைய நேரம் விளையாடாதீர்கள்.
குறிப்பாக உச்சிவெயில் நேரங்களில் வெயில்காலங்களில் அதிகமாக தண்ணீர்பருகவும், 3 - 4 லிட்டர். உச்சிவெயில் நேரத்தில் நடைபயிற்சி, உடல்பயிற்சி தவிர்த்துவிடவும். முதியோர், குழந்தைகளை வெயிலில் செல்லாமல் பார்த்துக்கொள்ளவும். வெப்பகூடுதலினால் ஏற்படும் அறிகுறிகள் உடலில்தெரிந்தால் உண்டானடியாக மருத்துவமனை செல்லவும்.