நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் கூட்டணியில் இருந்த தேமுதிகவும் வெற்றி பெறாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் விருதுநகரில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் கடைசி வரை டஃப் கொடுத்து சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இறுதியில் தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, ''தமிழ்நாடு முழுவதும் நாம் எத்தனையோ தேர்தல்களை பார்த்திருக்கிறோம். நாம் எத்தனையோ முறைகேடுகளைப் பார்த்திருக்கிறோம். இது போன்ற எத்தனையோ புகார்களையும் அவை நீதிமன்றத்திற்கு சென்றதையும் பார்த்திருக்கிறோம். ஐந்து ஆண்டுகள் கழித்துதான் அதற்கான தீர்ப்புகள் வருவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நான் என்ன கேட்கிறேன் என்றால் இது 'ஜனநாயக திருவிழா' என்று சொல்கிறது தேர்தல் ஆணையம். விஜய பிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் கடைசியில் ஓட்டு எண்ணிக்கையை நிப்பாட்டி அங்கு பிரஷராக இருக்கிறது எனச் செல்போனை ஆஃப் செய்து 10 முறை வெளியே சென்று கலெக்டரிடம் பேசியது என அங்கு நடந்தது எல்லாமே உள்ளங்கையில் நெல்லிக்கனியாக எல்லாருக்கும் தெரிந்தது.
இதைத்தான் நாங்கள் கேட்கிறோம். உறுதியாக இதற்கு தலைவணங்கி தேர்தல் ஆணையம்தான் இதற்கு ஒரு நல்ல தீர்வு தர வேண்டும்.தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஒரு நல்ல முடிவு கொடுப்பார்கள் என நினைக்கிறேன். விருதுநகரில் மதியம் மூன்று மணியிலிருந்து 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது ஏன்? 13-வது சுற்று எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. நள்ளிரவில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. நீதிமன்றத்திற்கு சென்றால் உண்மையாக உடனடியாக அதற்கு தீர்வு வருமா என்பதை உங்களிடமே கேட்கிறேன். விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார். தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக விருதுநகர் தேர்தல் அலுவலர் கூறினார். 45 நாட்கள் வரைக்கும் மறுவாக்கு எண்ணிக்கை கேட்க உரிமை இருக்கிறது. அதனால் நாங்கள் கேட்கிறோம். ஒரு தேர்வு எழுதுகிறோம். தேர்வில் நான் எடுத்த மதிப்பெண் நான் நினைத்ததை விட குறைவு என்றால் உடனடியாக மறுமதிப்பீட்டுக்கு போகிறார்கள் அல்லவா அதே போல இது. எவ்வளவு பெரிய தேர்தல். ஆறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கடைசி நேரத்தில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டிருக்கிறார் என்பது அனைவராலும் ஒத்துக் கொள்ளப்படும் பொழுது இதில் தேர்தல் ஆணையம் நீதி தர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்ற நிலையில் தோல்வியைத் தழுவினார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 4,379 என்பது குறிப்பிடத்தக்கது.