கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நார்சாம்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (38). கேரளா மாநிலத்தில் பொக்லைன் இயந்திர ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நதியா (32). இவர்களுக்கு மதன் (9), வைஷ்ணவி (6) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சக்திவேல் விடுப்பில் சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம், மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மார்ச் 1ம் தேதி வீட்டில் இருந்தபோது, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரம் அடைந்த சக்திவேல், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தினார். அப்போதும் கோபம் தணியாததால், அவருடைய கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார். அதையடுத்து சக்திவேலும் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அதற்குள் அக்கம்பக்கத்தினர் அங்கே ஓடிவந்து, சக்திவேலை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை காவல்துறையினர், சம்பவ இடம் விரைந்து சென்று நதியாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது ஒருபுறம் இருக்க, அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சக்திவேல், திங்கள்கிழமை காலை (மார்ச் 2), கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்றார். நீண்ட நேரமாகியும் வார்டுக்கு திரும்பவில்லை. சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் தேடிப்பார்த்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே ரத்த வெள்ளத்தில் சக்திவேல் சடலமாகக் கிடந்தார். விசாரணையில், சக்திவேல் மருத்துவமனையின் 5வது மாடிக்குச்சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. சந்தேகம் என்ற பெருந்தீயால், மனைவியைக் கொன்ற கணவன், பிறகு தானும் தற்கொலை செய்து கொள்ள, அவர்களின் இரு குழந்தைகளும் இப்போது ஆதரவற்றளாக தவிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.