Skip to main content

கூலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலம்! 750 காளைகளுடன் 500 காளையர்கள் மல்லுக்கட்டு!!

Published on 18/01/2020 | Edited on 18/01/2020

ஆத்தூர் அருகே, கூலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா உற்சாகமாக நடந்தது. 750 காளைகள் களமிறக்கப்பட்ட நிலையில், 500 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர்.

பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் சனிக்கிழமை (ஜன. 18) ஜல்லிக்கட்டு விழா நடந்தது. இதையொட்டி, கூலமேடு அரசு தொடக்கப்பள்ளிக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் மைதானத்தில் வீரர்கள் விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்க, தேங்காய் நார்க்கழிவுகள் பரப்பி ஜல்லிக்கட்டுக் களம் தயார் செய்யப்பட்டது.

 

koolamedu jallikattu

 

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைத்தார். சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 500 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக் காளைகளை அடக்கினர். ஜல்லிக்கட்டு விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 காளைகள் களமிறக்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள், ஐந்து ஷிப்ட் முறையில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை களத்தில் 100 வீரர்கள் இறக்கி விடப்பட்டனர்.

காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், வெள்ளி குடம், குக்கர், வெள்ளிக்காசு, சைக்கிள், டிவி உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து கூலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் கூறுகையில், ''மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவைப்போல் சேலம் மாவட்டம் ஆத்தூர் கூலமேட்டில் ஆண்டுதோறும் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவும் புகழ் வாய்ந்ததாகும்.

போட்டி தொடங்குவதற்கு முன்பு மாடுபிடி வீரர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. உரிய விதிகளைப் பற்றி ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்,'' என்றனர்.

மாவட்ட போலீஸ் எஸ்பி தீபா கனிகர் தலைமையில் 2 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

சார்ந்த செய்திகள்