Skip to main content

''முட்டிக்கு முட்டி தட்டினால் தான் புத்தி வரும்; வந்தால் திருப்பி அடிப்போம்''-குஷ்பு ஆவேசம்

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

"Knock knocking brings wisdom; If they come, we will hit them back'' - Khushbu Avesam

 

அண்மையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி குஷ்பு குறித்து மேடையில் அவதூறாக பேசிய வீடியோ ஒன்று வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ''திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அவதூறாக பேசியுள்ளார். பெண்கள் எப்பொழுதும் உங்களைப் பார்த்து அசிங்கமாக பேசுவதில்லை. நாகரீகம் என்பது பெண்களுக்கு தெரியும். எங்களுடைய தாய் வளர்ப்பை நாங்கள் கேவலப்படுத்த விரும்பவில்லை. யார் ஒருவர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார்களோ நீங்கள் உங்களுடைய தாயின் வளர்ப்பை அசிங்கப்படுத்துகிறீர்கள். அதைத்தான் சொல்வேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாய் தந்தை எல்லாமே கலைஞர். இப்படி மூன்றாவது தரமான பேச்சு இருக்கும்பொழுது அதை கண்டிக்காமல் அவர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். நான்கு ஆண்கள் அமர்ந்து கொண்டு பெண்கள் முன்னாடி வந்து விடக்கூடாது; எதிராக பேசக்கூடாது என்று பார்க்கிறார்கள். இன்று முதல்வர் பார்த்துவிட்டு எச்சரிக்கை கொடுக்கவில்லை என்றால் பாருங்கள் நாளைக்கு என் வீட்டில் 10 பேர் கல் தூக்கி வீசினாலும் எனக்கு தெரியும். அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. திமுகவினர் என் வீட்டில் கல் வீசியதை நான் ஏற்கனவே அனுபவப்பட்டிருக்கிறேன். எனக்கு அது பெரிய விஷயமே கிடையாது. அதை எப்படி சந்திக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.

 

இதைக் கட்சி ரீதியாக பார்க்காதீர்கள். அந்த கட்சியில் பேசினார்கள் இந்த கட்சியில் பேசினார்கள் என்பதை விட, எல்லா ஆண்களிடமும் நான் கேட்கக்கூடிய கேள்வி ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கு பெண்களை இழிவாக பேசுவதற்கு யார் உரிமை கொடுத்தது. அதை மட்டும் தான் நான் கேட்கிறேன். ஏனென்றால் இதுபோன்று கேவலமாக பேசும் பொழுது நீங்கள் அந்தப் பெண் ஒரு வீட்டின் மகாலட்சுமி, குத்துவிளக்கு ஏற்றுவதற்கு வந்தவள் என்று நீங்கள் பார்ப்பதில்லை. ஒரு தாயாக பார்ப்பதில்லை; மகள்கள் இருக்கிறார்கள் என்று பார்ப்பதில்லை; ஒரு மனைவி என்று பார்ப்பதில்லை; மக்கள் என்று பார்ப்பதில்லை; மருமகள் என்று பார்ப்பதில்லை; எதுவுமே பார்ப்பதில்லை. ஒரு பெண் அவ்வளவு இழிவாக போய்விட்டாளா? யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாமா? நான் பேசுவது எனக்காக பேசவில்லை நான் ஒவ்வொரு பெண்ணுக்காகவும் பேசுகிறேன். யாருமே ஒரு பெண்ணை பார்த்து இழிவாக பேசுவதற்கு தைரியம் வரக்கூடாது. வந்தால் திருப்பி அடிப்போம். இதை எல்லா பெண்களுக்கும் சொல்கிறேன்.

 

 

நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம். உங்களுக்கு பிரச்சனை என்றால் நாங்கள் இருக்கிறோம். அடிக்கிற தைரியம் எனக்கு இருக்கிறது. சண்டை போடுகிற தைரியம் எனக்கு இருக்கிறது. யாரை நம்பியும் நான் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. என்னுடைய திறமையை மட்டும் நம்பி வந்திருக்கிறேன். என்னை சீண்டி பார்க்க வேண்டாம். இதற்கு அப்புறம் எந்த இடத்தில் இருக்கும் பெண்ணையும் இழிவாக பேசினீர்கள் என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன். இந்த மாதிரி ஆண்களை முட்டிக்கு முட்டி தட்டினால்தான் புத்தி வரும். நான் தமிழ்நாட்டுக்கு வந்து 37 வருஷம் ஆகுது. இத்தனை வருடத்தில் ஒரு நாள் கூட நான் இப்படி கோபமாக பேசினதை யாராவது பார்த்து இருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரும் என்னை இவ்வளவு வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு நான் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் இனிமேல் குஷ்பு சும்மா இருக்க மாட்டார் என்று அர்த்தம். இனிமேல் என்னை சீண்டி பாருங்கள் எங்கு அடிக்க வேண்டுமோ அங்கு திருப்பி அடிப்பேன்'' என்று ஆவேசமானார்.

 

 

சார்ந்த செய்திகள்