பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யூ.ஜி.சி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் எனவும் மற்றொரு உறுப்பினராக, பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் எனவும் யூ.ஜி.சி புதிய விதியை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதே போன்று, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிட வேண்டுமென்று கோரி அம்மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் யு.ஜி.சி வரைவு விதிகளை எதிர்த்து தி.மு.க. மாணவரணி சார்பில் டெல்லியில் இன்று (06.02.2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்பாட்டத்தில் திமுக எம்.பி.க்கள், கூட்டணி கட்சி எம்.பி.க்கள், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி. பேசுகையில், “இந்த நாட்டில் உள்ள எல்லா வரலாறுகளையும், கலாச்சாரங்களையும், மரபுகளையும் அழிப்பதே ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கம் என்று நான் சில காலமாக கூறி வருகிறேன். அதுதான் அவர்களின் தொடக்கப் புள்ளி. அதைத்தான் அவர்கள் அடைய விரும்புகிறார்கள். அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தைத் தாக்கினர். ஏனெனில் அவர்கள் இந்த நாட்டில் தங்கள் யோசனை, ஒரே வரலாறு, ஒரே பாரம்பரியம் மற்றும் ஒரே மொழி என்று ஒரு கருத்தை திணிக்க விரும்பினர்.
வெவ்வேறு மாநிலங்களின் கல்வி முறையைக் கொண்டு அவர்கள் செய்யும் இந்த புதிய மற்றொரு முயற்சியாகும். அரசியல் சாசனத்தை தாக்க முடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ். புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இதுபோன்ற பல போராட்டங்கள் நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நமது மாநிலங்களை அவர்களால் தாக்க முடியாது. நமது கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் நமது வரலாறுகளை அவர்களால் தாக்க முடியாது” எனப் பேசினார்.