சேலம் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி சுந்தரி என்பவர் கடந்த 3 ஆம் தேதி மதியம் ரயிலுக்காக வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நடைமேடை எண் ஒன்றில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் கை குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் சுமார் 6 மாதம் மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையை கொடுத்துவிட்டு சிறிது நேரம் பார்த்துக் கொள்ளும்படியும் ஐந்து நிமிடத்தில் வந்து விடுவதாகவும் கூறி விட்டுச் சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் குழந்தையை கொடுத்த பெண் வராததால் பதற்றம் அடைந்த மூதாட்டி சுந்தரி இதுகுறித்து காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி குழந்தையை ஒப்படைத்தார். இதையடுத்து காவல்துறையினர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது ஆறு மாத பெண் குழந்தையை மூதாட்டி சுந்தரியிடம் ஒப்படைத்துவிட்டு செல்லும் பெண்மணி ரயில் நிலையத்தின் வெளியில் காத்துக் கொண்டிருந்த தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேக வேகமாக ஆட்டோவில் ஏறிச் செல்வது தெரியவந்தது.
இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காட்பாடி இருப்புப்பாதை காவலர்கள், யார் அந்த பெண்மணி? குழந்தை அவருடையது தானா, அல்லது கடத்தல் குழந்தையா? இவர்கள் எந்த ஊர்? பச்சிளம் குழந்தையை ஏன் யாரோ ஒருவரிடம் தந்துவிட்டுச் சென்றார்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அவர்கள் ஏறிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் யார் என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், குழந்தையை ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற பெண் வேலூர் மாவட்டம் மோத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (வயது 27) என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கலைச்செல்வியிடம் விசாரித்ததில் அவருக்குப் பிறந்த நான்காவது பெண் குழந்தை இது என்பது தெரிய வந்தது. குடும்ப வறுமையின் காரணமாகக் குழந்தையை வளர்க்க முடியாமல் ரயில்வே நிலையத்திலிருந்த மூதாட்டியிடம் விட்டுச் சென்றதாகவும் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் குழந்தையின் பெற்றோரை எச்சரிக்கை செய்து அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்ததோடு கலைச்செல்வியின் குழந்தைகள் வளருவதற்கும் படிப்புக்குமான உதவியைச் செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், இந்த குழந்தைக்கு ’தமிழ் மகள்’ எனப் பெயர் வைத்து அனுப்பி வைத்தனர்.