![Karur Puliyur Municipal Election Postponed!](http://image.nakkheeran.in/cdn/farfuture/IBBlDJTzoWO_sbNBsgWVCDWo-h_TL_Fni0_J_WVyxB4/1648286043/sites/default/files/inline-images/th_1946.jpg)
கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக கூட்டணி 13 வார்டுகள், சுயேச்சை 1 வார்டு, பாஜக 1 வார்டு வெற்றி பெற்றிருந்தது. புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த முறை நடைபெற்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் திமுக உறுப்பினர் புவனேஸ்வரி என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மேலும் போட்டியின்றி தலைவராகத் தேர்வானார்.
இதனை அடுத்து தமிழகம் முழுவதும் சில இடங்களில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் திமுக உறுப்பினர்கள் பொறுப்பேற்றிருந்தனர். இதற்கு அதிரடியாக நடவடிக்கை எடுத்து கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பொறுப்பேற்றுள்ள திமுக உறுப்பினர்கள் அவர்கள் ஏற்றுள்ள பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து 08.03.2022 அன்று புலியூர் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்று இருந்த திமுக உறுப்பினர் புவனேஸ்வரி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து இன்று புலியூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தல் 9.30 மணியளவில் துவங்கியது. தேர்தல் நடைபெறும் குறிப்பிட்ட நேரத்திற்கு தலைவர் பதவிக்கு போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி, துணைத் தலைவர் அம்மையப்பன், பாஜக உறுப்பினர் விஜயகுமார் ஆகிய மூன்று நபர்கள் மட்டுமே வந்தனர். பெரும்பான்மையான உறுப்பினர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராத காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
15 உறுப்பினர்களைக் கொண்ட புலியூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கலாராணி, திமுகவை சேர்ந்த துணைத் தலைவர் அம்மையப்பன், பாஜக உறுப்பினர் விஜயகுமார் ஆகிய மூன்று பேர் மட்டுமே தேர்தலுக்கு வருகை புரிந்தனர். 11 திமுக உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை உறுப்பினர் ஒருவர் தேர்தலை புறக்கணிப்பு செய்ததால் மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.