அதிரடி பேச்சுக்குச் சொந்தக்காரரான தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, அவ்வப்போது வெளியிட்டு வரும் கருத்துகள் சில நாட்கள் பரபரப்பாக பேசப்படும். அதன் பிறகு, கால ஓட்டத்தில் காணாமல் போய் விடும்.
அந்த வகையில், ஆவின் பால் பாக்கெட்டுகளில் ‘திருக்குறள்’ அச்சிட்டு வினியோகிப்போம்; திருக்குறளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம் என, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சரின் ஒப்புதலை பெற்ற பிறகு இத்திட்டம் அமுலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை வரவேற்று பாஜக சமூக ஊடக பிரிவு தலைவர் நிர்மல் குமார் ‘இதன்மூலம் ஒவ்வொரு இல்லத்திலும் திருக்குறளை எளிமையாகக் கொண்டு சேர்க்க முடியும்’ என பின்னூட்டம் செய்து, தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வந்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ட்வீட்டுக்குப் பின்னூட்டமாக வந்திருக்கும் கருத்துகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
‘திருக்குறளை தமிழ்ல அச்சடிப்பீங்களா? இல்ல இந்தியில போடூவீங்களா? இப்பவே தெளிவா சொல்லிடுங்க’ என ஒருவர் கேட்டிருக்கிறார்.
‘அப்படியே ஆத்திசூடியையும் முயற்சிக்கலாமே..’ என மற்றொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘அரசுப் பேருந்துகளில் உள்ளது போல் ஒரே குறளை அச்சிடாமல் இருப்பின் நன்று" என்று மற்றொருவர் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.
"ஐடியா நல்லா தான் இருக்கு.. ஆனா காலி பாக்கெட்டுகள் குப்பைக்கல்லவா போகும் ? அதனால் பயன் இல்லையே?" என மற்றொருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதேபோல் ‘ஆவின் பால் கவரில் நாட்டு மாட்டின் புகைப்படத்தைப் போடுங்க. இப்ப உள்ள பாரின் மாட்டின் புகைப்படம் வேண்டாம்" என ஒருவர் மனக்குமுறலை வெளியிட்டிருக்கிறார்.
அந்த ட்விட்டர் பக்கத்தில், ஒரு சிலரே ஆவின் பால் கவரில் திருக்குறள் அச்சிடும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பெரும்பாலான கருத்துகள் எதிர்மறையானவையே!
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமா? வராதா? தமிழக அரசுக்கே வெளிச்சம்!
மிக விரைவில் தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்#Aavin https://t.co/Ne7gncwtIS
— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) November 12, 2019