அரசு மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும், திருவாடனை எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
அதன்பின் எழும்பூரில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை நீதிமன்றத்தில் கோரியிருந்தது. அந்த கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் காவிரி விவகாரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராடியது தொடர்பாக மேலும் இரண்டு வழக்குகள் அவர் மீது போடப்பட்டது.
கருணாஸ் ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான உத்தரவை இன்று பிறப்பிக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அவருக்கு ஜாமின் வழங்கி மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை உத்தரவிட்டுள்ளார். அவதூறு பேச்சுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்த நிலையில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராடியது தொடர்பான இரண்டு வழக்குகளுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சிறைத்துறை அதிகாரிகளுக்கு ஆணை கிடைத்தபின் நாளை காலை கருணாஸ் விடுதலை செய்யப்படலாம் என செய்திகள் வந்துள்ளன.