கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வண்ணாங்குடிகாடு கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், இப்பள்ளி வளாகத்தில் இருந்த பழைய வகுப்பறை கட்டடங்களை இடித்து விட்டு, புதிய பள்ளிக் கட்டடம் கட்டப் போவதாகக் கூறி ஊராட்சி நிர்வாகம் சார்பில் பழைய பள்ளிக் கட்டடத்தை இடித்துள்ளனர். இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தொடக்கப்பள்ளியில் பயிலக்கூடிய மாணவ மாணவிகள் போதிய வகுப்பறை கட்டட வசதி இல்லாததால் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள நடுநிலைப் பள்ளிக்குச் சென்று பயிலக் கூடிய அவல நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் வண்ணாங்குடிகாடு கிராமத்தின் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி, தன்னிச்சையாக செயல்பட்டு புதிய பள்ளிக்கூடம் கட்டுவதாகக் கூறப்பட்ட பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கிராம மக்கள், மாணவர்களின் நலனுக்காக பள்ளி கட்டடங்கள் கட்டக் கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதில் தீவிரமாக இருந்துள்ளது. அதையடுத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, வண்ணாங்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள், கையில் பதாகைகளை ஏந்தி விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தின் போது ஏற்கனவே தங்களது கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ள நிலையில் எதற்காக புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட வேண்டும் என்றும், போதிய வகுப்பறை கட்டட வசதி இல்லாமல் மாணவர்கள் அவதி அடைந்து வரும் நிலையில், புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டும், அலட்சியமாக செயல்படும் ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலையில் படுத்துக் கொண்டும், மரத்தை வெட்டி சாலை நடுவே குறுக்கே போட்டுக் கொண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்றதால், விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணியை நிறுத்துவதாகக் கூறிய பின்பு சாலை மறியலைக் கைவிட்டனர்.