அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டிற்கு அருகே கொடிக் கம்பம் நடும் விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாகக் கட்சியின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதற்காக எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள். சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்களுக்கு பன்னிரண்டாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். மேலும் 55 அடி உயரக் கம்பத்தில் கொடி கண்ணுக்கு தெரியாது. காக்கா, குருவி உட்கார மட்டுமே அந்தக் கொடிக் கம்பம் பயன்படும் எனத் தெரிவித்ததோடு மீண்டும் கொடிக் கம்பம் அமைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நிபந்தனை விதித்து அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கினார்.