சிதம்பரம் அருகே உள்ள சித்தலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் வயது 54 இவர் கடந்த 22- ஆம் தேதி நள்ளிரவு தனது வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு 2 சொகுசு கார்களில் வெளிநாட்டினர் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த ராமலிங்கம் இந்த நேரத்தில் உங்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த 4 பேரும் ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் ஆங்கிலத்திலேயே திட்டி உள்ளனர். மேலும் ராமலிங்கத்தின் வீட்டுக்குச் சென்று அவரது பைக்கை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து ராமலிங்கம் சத்தம் போட்டுள்ளார்.
உடனே அந்த நான்கு பேரும் 2 சொகுசு கார்களையும் விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து ராமலிங்கம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அண்ணாமலை ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தப்பியோடியவர்கள், குறித்து தீவிர விசாரணை செய்து வந்ததில் வெளிநாட்டினர் வந்த சொகுசு கார்களில் ஒரு சொகுசு கார் கர்நாடக மாநிலத்தின் பதிவு எண் கொண்ட சொகுசு கார் என்பதும் அந்த கார் திருட்டு கார் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் அண்ணாமலைநகர் போலீசாரால் கைப்பற்றப்பட்ட இனோவா சொகுசு கார், கர்நாடக மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளரின் கார் என்பது தெரிய வந்தது. கர்நாடக மாநிலத்தில் அந்தக் கார் திருடப்பட்ட சம்பவமும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் சிதம்பரத்தில் தங்கியிருந்த தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர். அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் அகஸ்டின் கிராஸ் பிரான்சிஸ் (26) மற்றும் எலியா அமின் எலியா (27) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்களில் ஒருவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த முன்னாள் மாணவர் என்பதும், மற்றொருவரான எலியா தற்போது அண்ணாமலை பல்கலைக்கழத்தில் படித்து வரும் மாணவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.