Skip to main content

தமிழ்நாடு போலீசாரிடம் சரணடைந்த கர்நாடகா பெண் மாவோயிஸ்ட்!

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

Karnataka woman  surrenders to Tamil Nadu police

 

கர்நாடகா மாநிலம் ஷிவமோகா பகுதியில் இயங்கும் மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினராக இருந்தவர் சந்தியா. தற்போது 39 வயதாகும் இவருக்கு இயக்கத்தில் பிரபா, நேத்திரா, மது என்கிற பெயர்களும் உண்டு. இவரது கணவர் பி.ஜி. கிருஷ்ணமூர்த்தி, மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர், மேற்குத் தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல குழுவின் பொறுப்பாளராகவும் உள்ளார். இவர் கடந்த நவம்பர் 9ஆம் தேதி கேரளா சிறப்பு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் சந்தியா, தான் சரணடைய விரும்புவதாக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மூலமாக தமிழ்நாடு காவல்துறைக்குத் தூதுவிட்டுள்ளார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வடக்கு மண்டலத்துக்கான க்யூ பிரிவு போலீசாருக்குத் தகவல் தந்துள்ளனர். அதன் அடிப்படையில் அவரை பாதுகாப்பாக தமிழ்நாடு வரவைத்த போலீசார், முதற்கட்ட விசாரணையை முடித்துக்கொண்டு திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அவர் வேலூர் சாரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி. பாபுவிடம் ஒப்படைத்தார்.

 

Karnataka woman  surrenders to Tamil Nadu police

 

இதுக்குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாபு, “சந்தியா மீது 40 வழக்குகள் உள்ளன. அவர் சரணடைந்துள்ளார். அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி கைதான நிலையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சந்தியா, குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப முடிவுசெய்து சரணடைந்துள்ளார். மாவோயிஸ்ட்கள் சரணடைந்தால் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையான வசதிகள் செய்துதர அரசு அறிவித்துள்ளது. அதன்படி அவருக்கான நிதியுதவி வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். கர்நாடகா காவல்துறை இவரை கைது செய்ய முயன்றால் நாங்கள் இவரை அவரிடம் ஒப்படைக்க மாட்டோம். கர்நாடகாவில் உள்ள வழக்குகளை இவர் எதிர்கொண்டாக வேண்டும்; அதற்கான உதவிகளை நாங்கள் செய்வோம். இவர் வேலூரில் உள்ள மகளிர் பிற்காப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்