
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, "MNM பெற்ற வெற்றி அல்ல... எம் எண்ணம் வென்றது" என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், ஒருவருக்கு ஒரு பாட்டில் வழங்க வேண்டும், மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும், அதற்கு மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்திருந்தது.
இந்த நிபந்தனைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் வழக்கறிஞர் ஜி. ராஜேஷ், குன்றத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் திலீபன் ஆகியோரும் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட அனைத்து மதுபானக் கடைகளையும், ஊரடங்கு முடியும்வரை மூடவேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி வெல்லும் தமிழகம்” என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.