ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ்க்கு சொந்த ஊரான மன்னார்குடி பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என அனைவரும் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கமலா ஹாரிஸ் அம்மாவின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம். அந்த கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் தான் கமலா ஹாரிஸ். அவர் வெற்றி பெற்று அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டதை சொந்த குடும்பத்தின் வெற்றியாக நினைத்து துளசேந்திரபுரம் கிராமமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிவருகின்றனர்.
அமெரிக்காவின் 46வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் ட்ரம்புக்கும், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. துணை அதிபராக போட்டியிட்டார் கமலா ஹாரிஸ். அவர் வெற்றிபெறவேண்டுமென திருவாரூர் மாவட்டம் பைங்காநாடு துளசேந்திரபுரம் பகுதி மக்கள் ஆங்காங்கே வாழ்த்து பேனர்கள் வைத்ததோடு குலதெய்வ வழிபாடுகளையும் செய்தனர். அதோடு கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டுமென அவரது குலதெய்வ கோவிலான ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீசேவகப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கினர்.
மிகவும் பின்தங்கிய மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தின் குக்கிராமத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்,மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கவின் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது இந்த மண்ணுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை," என குதுகளிக்கின்றனர்.
கமலா ஹாரிஸ் வெற்றியை தொடர்ந்து துளசேந்திரபுரம் கிராமத்தில் தர்மசாஸ்தா குல தெய்வ கோவிலில் இன்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் கலந்துகொண்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ்," கமலா ஹாரீஸ் எங்கள் மண்ணை சேர்ந்தவர் என்பது எங்களுக்கு மிகபெரிய பெருமையாக இருக்கிறது. கமலா ஹாரிஸ் தமிழகம் வருவது சுலபமான காரியமல்ல, தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே கிடைத்துள்ள பெருமை" என தெரிவித்துள்ளார்.
திமுகவினரும் வெடிவெடித்து இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். எம்,எல்,ஏ கலைவாணன் கூறுகையில், "திருவாரூர் மாவட்டத்திற்கென ஒரு மிகப்பெரிய பெருமை இருக்கிறது. அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக கமலா ஹாரிஸின் வெற்றி அமைந்திருக்கிறது. அவரது வெற்றியை பெண்ணினத்திற்கு கிடைத்த வெற்றி, தொடர்ந்து பெண் இனத்திற்காக போராடி வருபவர்களுக்கு கிடைத்த வெற்றி, இந்த மண்ணுக்கு கிடைத்த வெற்றி," என்கிறார்.