தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை, சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் அழைத்து சென்று அடித்ததில் அவர்கள் இருவரும் ஒருவர்பின் ஒருவராக உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். சிலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக்கூடாத குற்றம்" என்று தெரிவித்துள்ளார்.