கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த மலையில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகத் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக ரகசியத் தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக்’கிற்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் தனிப்படை அமைத்து மலைப்பகுதி கிராமங்களில் சோதனை செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நில அபகரிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப் இன்ஸ்பெக்டர் ராஜா துரைராஜ், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் காவலர்கள் மலைப்பகுதியில் உள்ள தாழ்மதூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்கு அரசு அனுமதி பெறாத நான்கு நாட்டுத் துப்பாக்கிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
அதே போன்று கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு ஆவணக் காப்பகப் பிரிவு டிஎஸ்பி விஜயராமுலு, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 16 போலீஸார் தாழ் கெண்டிக்கல் கிராமத்தில் புகுந்து சோதனையிட்டனர். அங்கே இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். கல்வராயன் மலைக் கிராமங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆறு நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கோவிந்தன், மாயவன், தருமன், முனியாண்டி ஆகியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கல்வராயன் மலைப் பகுதிகளில் அனுமதியில்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பது சட்டப்படி குற்றம் ஆகும். ஆகையால் யாரேனும் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தால் அருகில் உள்ள காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேபோன்று அவ்வப்போது கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்வதும், அப்போது அது சம்பந்தமாகச் சிலர் கைது செய்து வழக்குப் பதிவு செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆனால் கள்ளத் துப்பாக்கி தயாரிப்பது என்பதோடு மட்டும் முற்றுப்பெறவில்லை. அதே போன்று மலைக்கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர் சம்பவமாக உள்ளது. காவல்துறையினர் அவ்வப்போது அப்பகுதிக்குச் சென்று கள்ளச்சாராய ஊறல்களையும் காய்ச்சப்பட்ட சாராயத்தையும் அழித்து வருகிறார்கள். அப்படியும் அவ்வப்போது கள்ளச்சாராய கும்பல் வெளிப்படுவதும் அவர்கள் மீது போலீஸார் வழக்குப் போடுவதும் தொடர் சம்பவங்களாக உள்ளன. நேற்று முன்தினம், கல்வராயன்மலை பகுதியில் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ஒரு நபரை போலீஸார் மடக்கி உள்ளனர். அவர் இரு சக்கர வாகனத்தையும் டியூபில் எடுத்த வந்த கள்ளச் சாராயத்தையும் போட்டு விட்டுத் தப்பி ஓடி விட்டார். இது குறித்தும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். எனவே குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவரும் கல்வராயன் மலைப் பகுதியைக் குற்றமற்ற மலைப் பகுதி கிராமங்களாக மாற்றுவதற்கு காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை இணைந்து செயல்பட வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.