சென்னையில் செயல்பட்டு வரும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் அனைத்துவகை நோய்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
2 ஆயிரத்து 500 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த அரசு மருத்துவமனையில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை புறநோயாளிகளாக வருகை தந்து சிகிச்சை பெறுகிறார்கள். மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் தலைநகரில் அமையப்பெற்றுள்ள தலைசிறந்து விளங்கும் இந்த மருத்துவமனையில் அனைத்து மருத்துவத் துறைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன என அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ராஜீவ்காந்தி பொது அரசு மருத்துவமனை கடந்த 15 மாதத்தில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் கல்லீரல் மாற்றும் அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கல்லீரல் மாற்றும் அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனையில் 35 லட்சம் வரை செலவாகும் நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டம் மூலம் கட்டணமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.