காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கல்லணைக் கால்வாயில் தற்போதுதான் புனரபை்பு மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் என்ற பெயரில் கால்வாய் உடைக்கப்பட்டுக் கிடக்கிறது. இதனால் புதுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதி கடைமடைப் பகுதிக்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டு ஏரி, குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. ஆர்ப்பரித்து வரும் தண்ணீரைக் கொள்ளிடத்தில் திறந்து வீணாகக் கடலில் கலக்க வைக்கிறார்கள் என்று வேதனையில் உள்ளனர் கடைமடைப் பாசன விவசாயிகள்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அனைத்து மராமத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு கடைமடைக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அதிகாரிகள் சொன்னாலும், தற்போது நடக்கும் பாலங்கள், மதகுகள், சட்டர்கள் அமைக்கும் பணிகளும் தரை தளம், தடுப்புச் சுவர் பணிகளும் நடந்து முடியக் காலதாமதம் ஏற்படும் நிலையே உள்ளது.
இந்த நிலையில்தான் அரசு வழிகாட்டுதல் படி ஒரு பணி தொடங்கும் முன்பே பணிகள் குறித்த பதாகைகள் வைக்க வேண்டும் என்ற உத்தரவுப்படி செவ்வாய்கிழமை(6.8.2024) புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு சட்டர் அருகே பணிக்கான தகவல் பலகை நடப்பட்டது. அதாவது மேற்பனைக்காடு முதல் நெய்வத்தளி வரை சுமார் 7 கி.மீ தூரத்தில் ரூ.84 கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் அந்த தகவல் பலகை பொதுமக்கள் பார்த்துவிடாமல் இருக்க ஆற்றுக்குள் இருந்து பார்க்கும் விதமாகத் தகவல் பதாகை வைத்துள்ளனர்.
ஏன் இப்படி வெளியே தெரியாமல் பலகை வைக்கப்பட்டுள்ளது என்று கேட்டபோது, அடுத்த கரையில் நின்று பார்த்தால் அதிகாரிகளுக்குத் தெரிய இந்த பதாகை திருப்பி வைக்கப்படுவதாகக் கூறுகின்றனர். அதிகாரிகளே தயாரித்து வைக்கும் பதாகையை மீண்டும் ஏன் அதிகாரிகள் மறுகரையில் நின்று பார்க்க வேண்டும்? அதிலும் அருகில் நின்று பார்த்தாலே எழுத்துகள் தெரியாத அளவில் சிறிய எழுத்தில் உள்ளதை எப்படி தூரத்தில் நின்று அதிகாரிகள் பார்ப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு பேராவூரணி வட்டம் ஏனாதிகரம்பையில் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் மதகுகள் மராமத்து செய்ததாக இதேபோல் ஆற்றுக்குள் நின்று பார்ப்பது போல தகவல் பதாகை வைக்கப்பட்டது. அதனை நக்கீரன் சுட்டிக்காட்டிய பிறகு அதிகாரிகள் பதாகையை அகற்றிச் சென்றனர். கடந்த வருடம் ரூ.10 லட்சத்தில் மராமத்து செய்த பாலமும் தற்போது நிதி ஒதுக்கி மராமத்து பணிகள் நடக்கிறது. அதேபோல் தான் மேற்பனைக்காட்டிலும் தகவல் பதாகையை மறைத்து வைத்துள்ளனரா என்கிறார்கள் விவசாயிகள்.