கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவரும் நிலையில் நேற்று சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையிலான அதிகாரிகள் பள்ளியின் மேல் ட்ரோனை பறக்கவிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதேபோல் சம்பந்தப்பட்ட பள்ளியில் வன்முறையின் பொழுது சேர், டேபிள் உள்ளிட்ட பள்ளி உடைமைகளை சிலர் எடுத்துச்சென்றதாகப் புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுத்த பொருட்களை ஒப்படைக்க தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த தண்டோரா அறிவிப்பை அடுத்து பொருட்களை எடுத்து சென்ற மக்கள் அவற்றை மீண்டும் பள்ளி வளாகத்தில் வைத்துள்ளனர். சேர், டேபிள், கேன்டீனில் சமையலுக்காக பயன்படுத்தப்பட்ட கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பல பொருட்களை ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளதாக கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் போலியான தகவல்கள், வதந்திகள் பரப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக 32 யூடியூப் பக்கங்கள், சமூக வலைத்தள பக்கங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார்.