கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சார்பில் இன்பதுரை, பாமக சார்பில் கே.பாலு, பாஜக சார்பில் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இது தொடர்பாக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த மனுக்கள் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சித்திக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (11.07.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில், “புதிதாக மேலும் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் இது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைப்பதிவு பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “கால தாமதம் செய்யாமல் விஷ சாராய மரண சம்பவம் தொடர்பாக மனுதாரர்களுக்கு அறிக்கை மற்றும் பதில் மனுக்களை தமிழக அரசு அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய அனைத்து வழக்குகளும் அடுத்த வியாழன் (ஜுலை 18) அன்று விசாரிக்கப்படும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.