
கரோனா நோய்ப் பரவும் என்ற அச்சம் காரணமாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பெரும்பாலான திருமணங்கள் அனைத்தும் ஆடம்பரமின்றி மிகவும் எளிமையாக உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று நிச்சயிக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் மற்றும் பிரியா ஆகியோரின் திருமணமும் முக்கிய உறவினர்கள் முன்னிலையில் மணமகன் ஊரான புகைபட்டியில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது புகைப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஜெயபிரகாஷ், மணமகள் பிரியா ஆகிய இருவருக்கும் ஏற்கனவே பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஊரடங்கில், அரசு அதிகாரிகள் வழிகாட்டுதல்படி திருமணத்தில் உறவினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அதோடு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இனிதே நடந்து முடிந்த இந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்களுக்கும் தனித்தனியாக வருகை தந்து வாழ்த்திய ஊர் மக்களுக்கும் மணமக்கள் இருவரும் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அன்பளிப்புகளை வழங்கினார்கள். அது என்ன அன்பளிப்பு எனத் தெரிந்து கொள்ள ஆவல் ஏற்படும் அல்லவா? ஒரு எவர் சில்வர் தட்டு, அதில் கை கழுவும் கிருமிநாசினி பாட்டில், முகக் கவசம், கையுறை, டெட் ஆயில், சோப்பு அதோடு கரோனா நோய் பரவாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அச்சிடப்பட்ட துண்டு நோட்டீஸ். இவைகளை அந்தத் தட்டில் வைத்து வாழ்த்த வந்தவர்கள் அனைவருக்கும் மணமக்கள் ஜெயப்பிரகாசம், பிரியா வழங்கினார்கள்.

இந்த வித்தியாசமான அன்பளிப்பைப் பெற்றுக்கொண்ட அனைவரும் சந்தோஷமும் வியப்பும் அடைந்தனர். தமிழகத்தில் இப்போது உள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எளிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் கூட கரோனா விழிப்புணர்வு திருமணமாக நடத்தியதைப் பார்த்து வாழ்த்த வந்தவர்களும் மணமக்களின் உறவினர்களும் ஊர் மக்களும் மணமக்களுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துச் சென்றனர். இந்தக் கரோனா ஆடம்பரத் திருமணங்களை எளிமையாக்கி உள்ளதோடு ஆரோக்கியமான சுகாதாரமான உணவுகளையும் கொடுக்க வைத்துள்ளது.