இந்தியன் ஆயில் நிறுவனம் பொதுமக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்ய, புதிய இணைப்புப் பெற, இனி மிஸ்டுகால் தந்தால் போதும் என அறிவித்து ஒரு எண்ணை அறிவித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா என விளம்பரப்படுத்திக்கொள்ளும் மத்திய அரசும், அதன் நிறுவனங்களும் அதன்படி செயல்படுகிறதா என்றால் இல்லை என்பதே பலரின் குற்றச்சாட்டு. இந்நிலையில் இன்டேன் அறிவிப்பு குறித்து தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நம்மிடம் சுட்டிக்காட்டினார் திருவண்ணாமலையைச் சேர்ந்த இல்லத்தரசி.
அவர் நம்மிடம், "இன்டேன் கேஸ் ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதியதாக ஒரு எரிவாயு இணைப்பு பெற கடந்த மாதம் 15 ஆம் தேதி விண்ணப்பித்தேன். அதில் கேட்ட அனைத்துத் தகவல்கள் மற்றும் ஆவணங்களை அதில் இணைத்துவிட்டேன். இணையதளம் எனக்கு அதற்கு ஒரு நம்பர் வழங்கியது. பதில் மட்டும் வரவில்லை. இணையத்தில் அவர்கள் எந்த ஏஜென்சி வேண்டும் எனக் கேட்டிருந்தார்கள், நான் தேர்வு செய்திருந்த ஏஜென்ஸிக்கு நேரடியாகச் சென்று கேட்டபோது, 'உங்க விண்ணப்பம் எங்களுக்கு வரவில்லை' எனச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் ஒரு விண்ணப்பம் தந்தார்கள். அதைப் பூர்த்தி செய்து தந்தவுடன் ஒரு சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டர், டியூப்க்கு 4,800 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டார்கள். அதற்கு பில் தரவில்லை. இரண்டு நாளில் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டுவந்து தந்தார்கள்.
இணையத்தில் புதிய இணைப்புக்கான கட்டணம் எனப் பார்த்தால் டெபாசிட், புக், ரெகுலேட்டர், டியூப், நேரடியாக வந்து இணைப்பு தருவதற்கான கட்டணம், பதிவுக் கட்டணம் என மொத்தமே 1,900 ரூபாய்தான் வந்தது. ஆனால் என்னிடம் இவர்கள் பெற்றது 4,800 ரூபாய். ஆன்லைன் வழியாக என் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டிருந்தால், நான் ஆன்லைன் வழியாகவே எவ்வளவு தொகையோ அவ்வளவு தொகையைச் சரியாக அனுப்பியிருப்பேன். கூடுதல் தொகையை வாங்கியிருக்க முடியாது. கமிஷன் பெற முடியாது என்பதாலே இன்டேன் நிறுவனமும்-ஏஜென்ஸியும் இணைந்து ஆன்லைன் விண்ணப்பத்தை ஏற்று கனெக்ஷன் தராமல் இருக்கிறது. வெளியுலகத்துக்கு டிஜிட்டல் சேவை, மிஸ்டுகால் தந்தால் போதும் என ஏமாற்றுகிறது. இன்று வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தற்கு பதிலில்லை" என்றார்.
இன்டேன் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பலரிடமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.