உளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகம் வரும் 1ம் தேதி முதல் தற்காலிக வாடகைக் கட்டடத்தில் துவங்குவதற்கான ஆயத்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் 25- ம் தேதி புதிய மாவட்டத்திற்கான எஸ்.பி., நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இதுகுறித்து, குமரகுரு எம்.எல்.ஏ., சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.
அதன் பேரில் கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தனியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு எல்லை வரையறை, மாவட்ட தலைநகரம் அமைய உள்ள இடம் தேர்வு செய்யும் பணிகளுக்காக தனி அதிகாரி கிரண்குராலா நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான எல்லை வரையறைகள் தயாரிக்கும் பணிகள், மாவட்ட தலைநகரம் அமைய உள்ள இடம், கலெக்டர் அலுவலகம் அமைய உள்ள இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் செப்டம்பர் 1- ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகம் செயல்படுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே தற்காலிக வாடகை கட்டடத்தில் கலெக்டர் அலுவலகமும், பிற அலுவலகங்களும் செயல்பட உள்ளது. இதேபோன்று, மாவட்ட எஸ்.பி அலுவலகம், நுகர் பொருள் வாணிபக் கிடங்கு அருகே தற்காலிகமாக அமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இல்லையேல் மாற்று இடத்தில் செயல்படுத்த தயாராகி வருகின்றனர். அதற்கு முன்னதாக வரும் 25- ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கென தனியாக எஸ்.பி. நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அவர் நியமிக்கப்பட்டவுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்நிலையம் எல்லை வரையறுக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் தனி அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரம் அமைய உள்ள இடம் மற்றும் எல்லை வரையறை குறித்து அறிவிப்பு வெளியிடுவதை அதிகாரிகள் ரகசியமாக வைத்துள்ளனர். விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்டமாக அனைத்து துறை அலுவலகங்களுடன் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. ஓரிரு மாதங்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமையிடம் மற்றும் எல்லை வரையறுக்கப்பட்டு இறுதி முடிவெடுக்கப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.