சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.
மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.