சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
மாநில மகளிர் ஆணையத்தை தொடர்ந்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் காவல்துறை எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் காலாஷேத்ராவில் விசாரணையை துவங்கினர். இந்த விசாரணைக் குழு கடந்த 11 ஆம் தேதி சுமார் ஒன்றரை மணி நேரத்தில், கலாஷேத்ரா கல்லூரி முதல்வர் பகல ராம்தாஸ், இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.
மறுபுறம் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்ட நிலையில், தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஹரிபத்மன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி மோகனாம்பாள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத ஏழு மாணவிகள் தொடர்ந்த வழக்கில், மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த கலாஷேத்ரா தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். மாணவிகள் மற்றும் பெற்றோர் இடம்பெறும் வகையில் விசாரணைக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக்கூடாது என்றும் மாணவிகள் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஏற்கனவே மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் கலாஷேத்ரா தாமாக முன்வந்து குழு அமைத்தது சட்ட விரோதமானது என்றும் மாணவிகள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த தமிழ்நாடு மகளிர் ஆணையம் அளித்துள்ள அறிக்கையை நீதிமன்றத்தில் சீல் செய்யப்பட்ட கவரில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும். பாலியல் புகார் கூறிய மாணவிகள் மற்றும் சாட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் கலாஷேத்ரா நடவடிக்கையில் மாணவிகள் திருப்தி அடையவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மாணவிகள் திருப்தி அடையாததால் விசாரணைக் குழுவை நீதிமன்றமே அமைக்கலாமா என்பது குறித்தும் கலாஷேத்ரா பதில் தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.