கலை பற்றித் தெரியாதவர்களுக்கு 'கலைமாமணி' விருதுகள் வழங்கப்படுவதாக நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு தகுதி இல்லாத நபர்களுக்கு 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டுள்ளது. அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவானது நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, விருதுகளுக்கான மரியாதையே இந்தக் காலத்தில் இல்லாமல் போய்விட்டது எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “கலை பற்றித் தெரியாத நபர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகிறது.
கலைத் துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கலைமாமணி விருதுகள் இரண்டு திரைப்படங்களில் நடித்துவிட்டாலே வழங்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றத்தைக் கலைக்க நேரிடும்” என்று எச்சரித்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், தற்போது வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.