அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ளது பிச்சனூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது மனைவி 55 வயது குமுதம். இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஏழ்மை நிலையில் உள்ள அவர், அதே ஊரில் ஒரு குடிசையில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு அரசு வழங்கும் விதவை உதவித்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் 2013ஆம் ஆண்டிலிருந்து பெற்று வருகிறார்.
இந்த பணம் மாதம்தோறும் இவரது வங்கி கணக்கில் வந்துவிடும் அதை எடுத்து தனது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி வந்தார் குமுதம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வங்கி கணக்கு எண் 7 டிஜிட்டல் எண்களில் இருந்து 10 டிஜிட்டல் என மாற்றியுள்ளனர் வங்கி அதிகாரிகள். அது சம்பந்தமாக இவருக்கு விவரம் தெரியாததால் வங்கிக்கு சென்று பார்க்கவில்லை. வங்கி ஊழியர்களிடம் கேட்க தெரியவில்லை. அப்போது முதல் இவருக்கு அரசு உதவித்தொகை மாதம்தோறும் இவரது வங்கிக் கணக்கிற்கு வந்துகொண்டே இருந்துள்ளது.
ஆனால், குமுதம் அந்தப் பணம் தனக்கு வரவில்லை அரசு நிறுத்திவிட்டது என்று நினைத்துக்கொண்டு வங்கி பக்கமே செல்லவில்லை. சமீபத்தில் இவர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனது பேரன் மூர்த்தி என்பவர் துணையோடு சென்று தனக்கு பல ஆண்டுகளாக அரசு உதவித்தொகை வந்து சேரவில்லை என்று கேட்டுள்ளார். இவருக்கு உதவித் தொகை மாதம்தோறும் வங்கிக்கு அனுப்பப்பட்டு வருவதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் கூறியுள்ளனர். இதையடுத்து வங்கிக்கு சென்று அந்த பணத்தை எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது வங்கியில் நீண்ட நாட்களாக பணம் எடுக்காததால் நீங்கள் உங்கள் ஊர் கிராம நிர்வாக அலுவலரிடம் அந்த ஊரில் வசிப்பதற்கான சான்று வாங்கி வந்து கொடுத்துவிட்டு பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி தனது பேரன் மூர்த்தியுடன் தங்கள் கிராம நிர்வாக அலுவலர் சிவஞானத்தை அணுகியுள்ளார். சிவஞானத்திடம் கடந்த 5 ஆண்டுகளாக விவரம் தெரியாமல் அரசு உதவித் தொகையை எடுக்காமல் விட்டுவிட்டேன் அதன் மொத்த தொகை 58 ஆயிரம் ரூபாய் அந்த பணத்தை எடுப்பதற்கு தாங்களிடம் பரிந்துரை சான்று வாங்கி வர வேண்டும் என வங்கியில் கேட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் சிவஞானம் தங்கள் கணக்கில் சேர்ந்து உள்ள மொத்த பணத்தில் பாதியை எனக்குத் லஞ்சமாக தந்தால் பரிந்துரைக் கடிதம் தருவதாக கூறியுள்ளார். அவரிடம் குமுதம் தன்னுடைய ஏழ்மை நிலையை எடுத்துக்கூறிய பிறகும் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று கறார் செய்துள்ளார். அதற்குமுன் பணமாக 5,000 ரூபாய் கொடுத்து உள்ளனர் மீதி பத்தாயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து எடுத்ததும் தருவதாக பேசி முடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிவஞானம் பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தை கொண்டு சென்று வங்கியில் கொடுத்துவிட்டு முழு பணத்தையும் பெற்றுள்ளார் குமுதம். அப்போது அங்கே வந்த கிராம நிர்வாக அலுவலர் சிவஞானம், வாங்கிய மொத்த பணத்தில் பாதி பணம் லஞ்சமாக கொடுத்தே ஆகவேண்டும் என்று பிரச்சனை செய்துள்ளார். இந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. உடனே ஊர் பொதுமக்கள் திரண்டு சென்று கிராம நிர்வாக அலுவலர் சிவஞானத்தை அவரது அலுவலகத்தினுள்ளே வைத்து முற்றுகையிட்டுள்ளனர். இந்த தகவல் ஜெயங்கொண்டம் காவல்துறைக்கு தெரியவந்தது.
அதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில் போலீசார் அங்கு சென்றுள்ளனர். அதேபோல் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் கலைவாணன், துணை வட்டாட்சியர் ஜானகிராமன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி ஆகியோரும் அங்கு சென்றுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் சிவஞானம் விதவைப் பெண் குமுதத்திடம் லஞ்சம் கேட்டது குறித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வட்டாட்சியர் கலைவாணன், கிராம நிர்வாக அலுவலர் லஞ்சமாக பணம் கேட்டது உண்மை என எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே கிராம நிர்வாக அலுவலர் சிவஞானத்தின் மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக உயர் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை அவர்களுக்கு புகார் அனுப்பப்படும். அவர் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளித்தார். அதன்பிறகு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஏழை விதவைப் பெண்ணிடம் ஈவிரக்கமின்றி ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் சிவஞானத்தின் செயலை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.