
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தத் தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களின் போது நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வர முடியாமல் விடுபட்ட நபர்கள், ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள பெண்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு (ஆகஸ்ட் 18,19,20) நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.