மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்துவது குறித்து ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி? யார் யாருக்கு இந்த உரிமைத் தொகை கொடுக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' தொடர்பான விண்ணப்பப் படிவத்தைத் தமிழக அரசு வெளியிட்டது. அந்தப் படிவத்தில் பல்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளன. 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் சரிபார்க்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த வழிகாட்டு நெறிமுறையானது அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 36 ஆயிரம் ரேசன் கடைகளில் விண்ணப்பங்களைப் பெறும் முகாம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குறித்த 35 பக்கம் கொண்ட அரசாணை வெளியாகி இருந்தது. அதில் திட்டத்தின் நோக்கம், விண்ணப்பிக்கும் நடைமுறைகள், குடும்பத் தலைவி வரையறை, பொருளாதாரத் தகுதிகள், இந்தத் திட்டத்தில் பயன்பெறத் தகுதி இல்லாதவர்கள், செயல்படுத்தும் துறைகள், மாநில கண்காணிப்புக்குழு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விரிவான தகவல்கள் இந்த அரசாணையில் இடம்பெற்று இருந்தன.
இந்நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும்போது பயனாளர்களின் தங்களது கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் ஆகும். எனவே ஜூலை 17 ஆம் தேதிக்குள் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்யத் துணை ஆணையர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்திற்காக வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறவும் தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 500 ரேசன் கார்டுகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற அளவில் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.