திமுக தலைவர் கலைஞர் விரைவில் நலம் பெற வேண்டி காவேரி மருத்துவமனை வாயிலில் கையெழுத்து இயக்கத்தை திமுகவினர் தொடங்கியுள்ளனர்.
திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக இரண்டு நாட்கள் முன்னதாக காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அதில், கலைஞரின் உடல் நலிவுற்றுள்ளதால் அவருக்கு வீட்டில் வைத்தே மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தனர்.
ஆனால், நேற்று இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால், கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலைஞரின் உடல் நலம் விசாரித்து செல்ல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் காவேரி மருத்துவமனை வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.
இந்நிலையில், கலைஞர் விரைவில் நலம் பெற வேண்டி காவேரி மருத்துவமனை வாயிலில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, மருத்துவமனையில் கலைஞர் நலம் விசாரிக்க வரும் பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலைஞர் செய்த சாதனைகள் குறித்து ஒரு சில வார்த்தைகளை எழுதி கையெழுத்திட்டு செல்கின்றனர்.
அந்த வகையில், இன்று இரவு கலைஞர் நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனை சென்ற நக்கீரன் ஆசிரியர், நக்கீரன் கோபால் அவர்கள் கலைஞர் செய்த சாதனைகளை பட்டியலிட்டு கையெழுத்திட்டார்.
Published on 29/07/2018 | Edited on 29/07/2018