தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று(7ம் தேதி) அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினாவில் அமைந்துள்ள கலைஞரின் நினைவிடத்தில் கவிபேரரசு வைரமுத்து இன்று அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “கலைஞர், உடலால் மறித்திருக்கலாம் ஆனால், செயலால் வாழ்கிறார். வாழ்க்கை என்பது மரணத்தை வெல்வதற்கு, ஒரு மனிதனுக்கு கிடைக்கிற வாய்ப்பு என்று கருத வேண்டும். தான் வாழ்ந்த ஒவ்வொரு நாளிலும், மரணத்தை வெல்வதற்கான பணிகளை, செயல்களை, சாதனைகளை, சரித்திர சம்பவங்களை கலைஞர் உருவாக்கியிருக்கிறார்.
கம்யூனிஸ்ட்டுகள் அரசாண்ட மேற்கு வங்கத்தில் கூட கை ரிக்ஷா ஒழிக்கப்படவில்லை. தமிழ்நாட்டை ஆண்ட கலைஞர் கை ரிக்ஷாக்களை ஒழித்து, சைக்கிள் ரிக்ஷாக்களை அந்தத் தொழிலாளிகளுக்கு வழங்கினார். செம்மொழி பெற்றுதந்தார். இதுவும் ஒரு தேசிய சாதனை. செம்மொழி என்பது அவர் தமிழுக்கு மட்டும் பெற்றுதந்த மகுடம் அல்ல. உண்மையில் தமிழுக்கு அவர் செம்மொழி பெற்றுதரும்வரை செம்மொழி அங்கிகாரம் என்பது சமஸ்கிருதத்திற்கு இல்லை. அது மதிக்கத்தக்க ஒரு மொழியாக இருந்தது. செம்மொழியாக தமிழ் உயர்வு பெற்றபிறகுதான், சமஸ்கிருதத்திற்கு இந்த நாடு நீட்டித்தது என்பதை மறந்துவிடக்கூடாது. அவருடைய சாதனை என்பது நிர்வாக சாதனை. அவரின் நிர்வாக மரபணுக்கள் ஸ்டாலின் உடலில் ஓடிக்கொண்டு இருக்கின்றன என்று நாங்கள் மகிழ்ந்துகொண்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.