திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (21.8.2023) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கலைஞர் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். கோவையில் கலைஞர் செம்மொழி பூங்காவிற்கும், சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கும் விரைவில் அடிக்கல் நாட்டிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட காலத்தில் நடத்த வேண்டும்.
நிகழ்ச்சிகள் அனைத்திலும் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்பு அதிகம் இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு கலைஞர் ஆற்றிய பங்கின் மூலமாக நாட்டிற்கு அவர் எப்படி புகழ் சேர்த்தார் என்பது குறித்தும், அனைவரும் பயன்படுத்திடும் வகையில் கலைஞரைப் பற்றிய 100 பக்க வரலாறு வெளியிட்டு, அவற்றை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் இன்றைய இளைய தலைமுறையிடம் கலைஞரின் ஆளுமையை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாக அமைய வேண்டும்” என அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இரா.செல்வராஜ், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புப் பணி அலுவலர் என். சுப்பையன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.